அரசியல், தமிழ்நாடு

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி

Karunanidhi

தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக ஆட்சியில் 2008 ஜனவரி 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றினார். அந்த உரையில், தை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து, அதனை அரசு நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, அந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, இது தொடர்பான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ்.ராமன், பாமக சார்பில் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு.கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வம் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.தமிழக மக்களும் பொங்கல் விழாவினை எப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழினத்தின் அடையாளத்தைக் காட்டும் இந்த அறிவிப்புக்கு மூடு விழா கண்டது. முதல்வராக இருந்த ஜெயலலிதா 2011 ஆகஸ்ட் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்.

திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே இது ரத்து செய்யப்பட்டது. இதனை, அதிமுக அரசு ஒப்புக் கொள்கிறதோ இல்லை, அதைப் பற்றிக் கவலைப்படாமல் தை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும்’ என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.