நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 6

ரஞ்சனி
ரஞ்சனி

நமது மருத்துவக் கட்டுரைத் தொடரில் அடுத்த உறுப்பைப் பற்றிப் பார்க்கும் முன், நேற்று நான் படித்த இரண்டு செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இரண்டு செய்திகளுமே நாம் நமது ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கவனம் கொடுப்பதில்லை என்பதை சொல்லுகின்றன.

முதல் செய்தி:

11 வயது சிறுமிக்கு அதிக உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திக்கென்றது இதை படித்தவுடனே. இவள் தான் மிகக் குறைந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவள் என்று வேறு போட்டிருந்தார்கள். சஞ்சிதா போஸ் என்கிற இந்த சிறுமியின் உடல் பருமன் முழுக்க முழுக்க தவறான வாழ்க்கை முறையால் – உடற்பயிற்சி எதுவும் இல்லாமல், ஜங்க் உணவுகளை சாப்பிட்டு வந்ததால் உண்டான வினை. பெற்றோர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்களுக்குப் பின் பிறந்தவள் இந்த பெண். செல்லமோ செல்லம். பொதுவாக இந்த அறுவை சிகிச்சை – Bariatric surgery – இதைபோல சின்ன வயதுக்காரர்களுக்கு செய்வதில்லை. மரபணு சம்பந்தமான மருத்துவ சிக்கல்கள், ஹார்மோன்களின் ஒழுங்கின்மை இவற்றால் ஏற்படும் அதிகப் பருமனுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிச்சை செய்யப் படும். இந்த சிறுமிக்கு இது மாதிரியான தொந்திரவுகள் எதுவுமில்லை. பிறக்கும்போது நல்ல வசதியான குடும்பத்தில் ஆரோக்கியமான குழந்தையாகவே பிறந்திருக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கும் சஞ்சிதாவின் அப்பா சொல்கிறார்: ‘அவளை ரொம்பவும் செல்லமாகவும், அதிக கலோரிகள் கொண்ட உணவை ஊட்டியும் வளர்த்தோம்’ என்று. அவளுக்கு ஆறு வயதான போதுதான் அவள் வயதுக்கு மீறின பருமனுடன் இருக்கிறாள் என்று அவளது பெற்றோர்களுக்குப் புரிந்தது. அறுவை சிகிச்சைக்கு முன் இச்சிறுமியின் எடை 93 கிலோ. அவள் வயதுக் குழந்தைகளின் எடையை விட மும்மடங்கு எடை! காரிலேயே பள்ளிக்கு செல்வதும், பள்ளியில் எந்தவிதமான விளையாட்டுகளிலும் பங்கு கொள்ளாமலும், வீட்டிலும் எந்தவிதமான விளையாட்டும் விளையாடாமல் இருந்திருக்கிறாள் சஞ்சிதா. இதன் விளைவு 50 மீட்டர் கூட நடக்க முடியாமல் போனது அவளுக்கு. உடற்பயிற்சி, ஓட்டம் இவை அவளது முழங்கால்களை பாதிக்கும் (அதிக எடை காரணமாக) என்பதால் அதுவும் செய்ய முடியாமல் போயிற்று. அதுமட்டுமல்ல,  கூட படிக்கும் சிறுவர் சிறுமியரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அவர்களிடமிருந்து ஒதுக்கப் பட்டிருக்கிறாள். இது போதாதென்று உடல்நலக் கோளாறுகளும் வர ஆரம்பித்தது. தினமும் இன்சுலின் போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோயாளியாக ஆனாள். உயர் இரத்த அழுத்தம் ‘வரட்டுமா?’ என்று கேட்கும் நிலையிலும் இருந்தது.

இந்த bariatric அறுவை சிகிச்சை என்பது வயிற்றிலும் சிறுகுடலிலும் செய்யப் படும் அறுவை சிகிச்சை. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. இந்த அறுவை சிகிச்சை ஜீரண அமைப்பை மாற்றுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கட்டுப்பாடான உணவு முறைகளை கடை பிடிக்க வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் விளைவுகளும் உண்டு. முதலிலேயே உணவு கட்டுப்பாட்டை அனுசரித்தால் இந்த அறுவை சிகிச்சையை அடியோடு மறந்துவிடலாமே!

TML_5681
குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!

அடுத்த செய்தி:

கட்டுப்பாடில்லாத உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் இவைகளால் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய்க்கு ஆளாகிறார்கள். இரண்டாவது வகை சர்க்கரை நோய் 40 வயதுக்காரர்களை தாக்கும் என்று எண்ணியிருந்த வேளையில் இந்த செய்தி அதிர்ச்சிதானே? 12,782 நபர்களை (ஆண், பெண் சேர்ந்து)  சர்க்கரை நோய் பரிசோதனைக்கு ஆளாக்கிய போது மிக உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு இருந்த சுமார் 2,713 (21%) நபர்கள் வயது சராசரி 20-19 என்று தெரிய வந்திருக்கிறது. ‘பல இளைஞர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருப்பது இந்த பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது ஒரு அதிர்ச்சி தரும் விஷயம். பலர் இந்த நோயின் ஆரம்ப நிலையிலும் மேலும் பலர் அதிக சர்க்கரை அளவும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த பரிசோதனை பெங்களூரில் செய்யப்பட்டது. மன அழுத்தம், சரியான உடற்பயிற்சி இன்மை, சத்துணவு உட்கொள்ளாமை அல்லது ஊட்ட சத்து இல்லாத துரித உணவு உட்கொள்ளும் பழக்கம் இவை காரணமாகக் கூறப்படுகிறது. இந்த இளைஞர்களிடம் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று கூறியபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த நோய்க்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருப்பதில்லை.

28 வயது மென்பொருளாளர் தன் அனுபவத்தைக் கூறுகிறார்: ‘திடீரென்று என் உடல் இளைக்க ஆரம்பித்தது. எப்போதும் களைப்பாக இருந்தது. இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கப் பட்டன. மருத்துவரிடம் சென்று பல பரிசோதனைகள் செய்த பின் எனக்கு இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது தெரிய வந்தது.  சிகிச்சையின் முதல் படி உடற்பயிற்சியும், கட்டுப்பாடான உணவு முறையும். இப்போது இவற்றில் அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறேன்.’

இந்த ஆய்வு கூறுவது:  

13.61% (1,739)  நபர்களுக்கு அதிக சர்க்கரை அளவு  

இதில் 5.92% பெண்கள்  

7.63% ஆண்கள்  

3% பேர்களின் வயது வரம்பு 0-9 (குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய்)  

5%  10-19 வயதில் இருப்பவர்கள்.  

21% (2,713) நபர்கள் 20-29 வயதில் இருப்பவர்கள்.

கல்லூரி மாணவர்களுக்கு பரீட்சை பற்றிய மனக்கவலை, பயம் இவை காரணமாக சர்க்கரை நோய் வருகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளமை, சரியான நேரத்தில் தூக்கம் /  தேவையான அளவு தூக்கம் இல்லாமை, உடற்பயிற்சி செய்யாமை இவை காரணமாக சர்க்கரை நோய் வருகிறது.

இந்தச் செய்திகள் படிப்பவர்களை பயமுறுத்துவதற்கு அல்ல. நம்மிடையே நம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு தேவையான அளவு இல்லை என்பதை தெரிவிக்கவே இதை எழுதுகிறேன்.  

 குழந்தைகளுக்கு வேண்டும் என்ற அளவு மட்டுமே உணவு கொடுங்கள்.  

ஊட்டச்சத்துமிக்க உணவுகளை முதலிலிருந்தே கொடுத்து நல்ல பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.  

வெளியில் போய் சாப்பிடும் பழக்கத்தை குறையுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; காசுப் பெட்டிக்கும் நல்லது.  

 உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள். குழந்தைகளையும் ஆரம்பத்திலிருந்தே பழக்குங்கள்.   அலுவலக தொல்லைகளை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள்.  

 சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில், தேவையான அளவு தூங்கி குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள்.   

உங்கள் பாசத்தையும் நேசத்தையும் குழந்தைகளுக்கு சரியான அளவில் கொடுங்கள்.   

ஆரோக்கியம் முக்கியம் என்பதை நீங்களும் உணருங்கள்; உங்கள் மூலம் குழந்தைகளும் உணரட்டும். ஆரோக்கியமே பெரும் செல்வம்!

அடுத்த வாரம் : கண்ணே! கண்ணின் மணியே!

ஒரு விளக்கம்:

விழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரைத் தொடர் எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

 

நோய்நாடி நோய்முதல் நாடி’ ஒவ்வொரு புதன் தோறும் வெளியாகும் மருத்துவ விழிப்புணர்வு தொடர்.

“குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!” இல் 12 கருத்துகள் உள்ளன

  1. ஆரோக்கியம் முக்கியம் என்பதை நீங்களும் உணருங்கள்; உங்கள் மூலம் குழந்தைகளும் உணரட்டும். ஆரோக்கியமே பெரும் செல்வம்!///

    அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

  2. அதிர்ச்சி அளிக்கும் உண்மை தான். தெற்காசியர்களுக்கு நீரிழிவு நோய் பெருகி வருகின்றதாம். சீரற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை, அதீத மன அழுத்தங்கள், அக்கறையற்ற மகிழ்ச்சியற்ற வாழ்க்கை முறைகள். அப்பப்பா, இந்நிலைத் தொடர்ந்தால் அடுத்த 50 – 100 ஆண்டுகளில் பெரும்பான்மையான உயிரிழப்புக்கள், வாழ்க்கைக் கேடுகள் உண்டாகும் வாய்ப்புள்ளது.

    1. வாருங்கள் நிரஞ்சன் தம்பி!
      உண்மைதான். தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நிச்சயம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.
      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!

  3. அருமையான பதிவு நிஜம் தான் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும் அப்போதுதான் நம் குழந்தைகளுக்கு அதை உணர்த்தவும் கற்றுக்கொடுக்கவும் முடியும்

    1. வாருங்கள் விஜயா!
      நாம் முதலில் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் என்றால் என்ன என்று முன் உதாரணமாக இருப்போம்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  4. சர்க்கரை நோயாளிகள் அதிகமாகிக் கொண்டே போவதற்கு நம் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே போவது தான் , என்று சொல்லிக்
    கொள்கிறார்கள். அதை அழகாய் வெளிப்டுத்துவதோடு நிவாரணமும் அளிக்கிறது உங்கள் கட்டுரை. நல்ல மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.