அனுபவம், அறிவியல், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

40 வயதைக் கடந்தவர்களைத் தாக்கும் வெள்ளெழுத்து நோய்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 16

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி
ரஞ்சனி

பல வருடங்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வைத்திருந்தார். காலையில் செய்தித்தாள் வந்தது. சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார். செய்தித்தாள் கிட்டத்தட்ட அவரது கைகள் எவ்வளவு நீளுமோ அத்தனை தூரத்தில் இருந்தது. ‘என்ன இவ்வளவு தூரம் வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள்?’
‘இல்லையே, சரியாத்தான் வைச்சுண்டு படிக்கிறேன்…!’
‘டாக்டர் கிட்டே போய் செக்கப் பண்ணிக்குங்க. வெள்ளெழுத்து வந்திருக்கும்’ என்றேன்.
‘சேச்சே! அதெல்லாம் இருக்காது. எனக்கு நன்றாக படிக்க முடியறதே!’
‘ஆனால் எவ்வளவு தூரத்தில் வைத்துப் படிக்கிறீர்கள், பாருங்கள்…’
அவர் தனக்கு கண் குறை இருக்கும் என்று ஒத்துக் கொள்ளத் தயாராகவே இல்லை. நம் ஊரில் இப்படித்தான். ‘எனக்கு எதுவும் வராது’ என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.
யாருக்கும் எதுவும் வர வேண்டாம் என்றுதான் எல்லோருமே பிரார்த்திக்கிறோம். ஆனால் மனித உடம்பு தானே. அதுவும் வயதானால் சில கோளாறுகள் வரும். உடனடியாக கவனித்தால் ஆரம்பத்திலேயே குணப்படுத்தலாம்.
உடலுக்கு வயதாவதை தலையில் தோன்றும் நரை காண்பிப்பது போல கண்ணுக்கு வயதாவதை இந்த வெள்ளெழுத்து காட்டுகிறது.

இந்த வெள்ளெழுத்து என்பது என்ன?
நமது கண்களுக்கு கிட்டத்தில் இருக்கும் எழுத்துக்களைப்  பார்க்கும் திறன் குறைவது தான் வெள்ளெழுத்து. இது ஒரு நோயல்ல; முகத்தில் சுருக்கம் விழுவது போல இந்தக் குறைபாடு எல்லோருக்கும் ஏற்படுகிறது. நாற்பது வயதை ஒட்டி நிகழும் இது.  ஓரடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்த்தால் தான் தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இன்னும் அதிக தூரத்தில் வைத்துப் படிக்க வேண்டிய நிலை. இதனை சாளேஸ்வரம் என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Presbyopia என்கிறார்கள். இதற்கும் கிட்டப்பார்வைக்கும் சம்மந்தம் இல்லை. நம் கண்களில் இருக்கும் லென்ஸ்-இன் நெகிழ்வுத்தன்மை குறையும்போது நமக்கு இந்த வெள்ளெழுத்து உண்டாகிறது. பிரஸ்பையோப்பியா என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. கிரேக்க மொழியில் presbys என்றால் முதியவர் என்று பொருள். opia என்றால் பார்வைதன்மை. தமிழில் வயதானவர்களுக்கான பார்வை அல்லது மூப்புப் பார்வை என்று பொருள் கொள்ளலாம்.

அறிகுறிகள்:
 மிகச்சிறிய எழுத்துக்களை மங்கலான ஒளியில் படிப்பதில் சிரமம்.
 கண் களைப்பு, தலைவலி.
 வாசிக்கும் புத்தகத்தை கண் பார்வையிலிருந்து தூர வைத்துக் கொள்ளுதல்

என்ன சிகிச்சை?
இந்தக் குறைபாட்டை நீக்க முடியாது. அதற்கு பதில் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். படிப்பதற்கு மட்டும் அல்லது பை போகல் (Bifocals) கண்ணாடிகளை அணியலாம். பை போகல் கண்ணாடிகள் என்பது ஒரே கண்ணாடியை இரண்டாகப் பிரித்து  மேலே பார்ப்பதற்கும், கீழே படிப்பதற்கும் என்று செய்திருப்பார்கள். சிலர் படிப்பதற்கு மட்டும் கண்ணாடி அணிந்திருப்பார்கள். அதனால் இவர்கள் கண்ணாடியை மூக்கில் தள்ளிவிட்டு நம்மைப் பார்ப்பார்கள். அதேபோல கணணியைப் பார்க்கும்போது ரொம்பவும் தலையை நிமிர்ந்து கொண்டு பார்ப்பார்கள். அப்போதுதான் பார்வைக்கான கண்ணாடியை உபயோகப்படுத்த முடியும்.

முன்பெல்லாம் கண்ணாடியில் இரண்டு பிரிவு இருப்பது நன்றாகத் தெரியும். இப்போது அப்படியில்லாமல் ‘D’ வடிவத்தில் படிக்க உதவும் பகுதியை அமைக்கிறார்கள். இதையும்விட முன்னேறி இப்போது progressive லென்ஸ்கள் வந்துவிட்டன. கண்ணாடியில் எந்தவிதமான பிரிவும் இருக்காது. படிப்பதற்கும், பார்ப்பதற்கும் ஏற்றபடி சீரான முறையில்  இந்தக் கண்ணாடிகளில் ‘பவர்’ அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கண்ணாடிகள் விலை அதிகம் என்றாலும் எந்த உயரத்தில் எழுத்துக்கள் இருந்தாலும் தலையை ரொம்ப உயர்த்தாமல் நம் கண்களின் உயரத்திலேயே படிக்க முடிகிறது. (சொந்த அனுபவம்!)
ஒவ்வொரு வயதிலும் நமது கண்களின் குவியத் தூரம் மாறுபடுகிறது. சின்ன வயதில் இருக்கும் கூரிய பார்வை நாற்பது வயதில் இருக்காது. அதனால் கண்பார்வையில் வித்தியாசம் தென்பட்டவுடனே கண் மருத்தவரை அணுகுவது நல்லது.

கண்களுக்குப் பயிற்சி:
1. கண் சிமிட்டுதல்: (Blinking)
கண் சிமிட்டுதல் ஒரு பயிற்சியா என்று வியக்க வேண்டாம். ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும்போதும் நமது கண்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறது. இது நம் கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. கண் மூடுவதற்கு முன் பார்த்த காட்சிகள் மறைந்து புதிய காட்சியைப் பார்க்க கண்கள் தயாராகின்றன.
கண் சிமிட்டுதல் நமக்கு இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. ஒருவருடன் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கண் கொட்டாமல் உங்களையே பார்த்தால் (உங்கள் காதலன், காதலி பார்த்தால் அதற்கு அர்த்தம் வேறு!) அவர் வன்முறைக்குத் தயாராகிறார் என்று பொருள். அப்படியில்லாமல் வழக்கம்போல கண் சிமிட்டிக் கொண்டிருந்தால் நட்புடன் பேசுகிறார் என்று பொருள்.

2. உள்ளங்கையை கண் மேல் வைத்தல் (Palming)
 இதைச் செய்யும் முன் நாற்காலியில், அல்லது சோபாவில் வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
 கைகள் இரண்டும் தொடை மேல் இருக்கட்டும்.
 கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
 உள்ளங்கைகளை குழித்து வைத்து கண்களின் மேல் வையுங்கள்.
 உங்கள் விரல்கள் உங்கள் நெற்றியின் மேல் இருக்கட்டும்.
 கண்களின் மேல் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். கண்களை சிமிட்ட முடிய வேண்டும்.
இது என்ன பயிற்சி என்று தோன்றும். அதிக வேலை செய்து களைப்புறும் கண்களுக்கு இந்த பயிற்சி நிச்சயம் புத்துணர்ச்சி தரும்.

3. கண்களால் 8  போடுங்கள்: (Figure of 8)
 வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
 உங்கள் கண் முன்னே ஒரு மிகப்பெரிய 8  என்ற எண் எழுதப்பட்டிருக்கிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
 நிதானமாக கண்களால் அந்த 8 ஐ சுற்றி சுற்றி வாருங்கள். அதாவது கண்களால் எட்டு போடுங்கள்!
 இப்போது அதே எட்டை படுக்க வையுங்கள். மறுபடி கண்களால் எட்டு போடுங்கள். இந்தமுறை பக்கவாட்டில் உங்கள் கண்கள் இயங்கும். கண்கள் மட்டுமே அசைய வேண்டும். உங்கள் தலை மற்றும் உடல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
4. அருகே-தூர அருகே-தூர (near and far focussing)
 வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
 உங்கள் கட்டை விரலை உங்கள் கண்களுக்கு முன்னால் 10 அங்குல தூரத்தில் நீட்டுங்கள். சிறிது நேரம் கட்டைவிரலைப் பார்த்த பின் 10 அல்லது 20 அடி தூரத்தில் இருக்கும பொருளைப் பாருங்கள்.
 ஒவ்வொருமுறை ஆழ்ந்து மூச்சு விடும்போதும் அருகே – தூர என்று பார்வையை மாற்றி மாற்றிப் பாருங்கள்.
இந்தப் பயிற்சியை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
5. உருப்பெருக்குதல் (Zooming)
 வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
 கட்டைவிரலை உயர்த்தியவாறே கையை நீட்டுங்கள்.
 கை முன்னால் நீளும்போது உங்கள் பார்வையும் கட்டைவிரலை தொடர்ந்து செல்லட்டும்.
 இப்போது கட்டைவிரலை உங்கள் முகத்தருகே கொண்டுவாருங்கள் – உங்கள் பார்வை கட்டைவிரலின் மேலேயே இருக்கட்டும்.
 இதைபோல நான்கு அல்லது ஐந்து முறை செய்யுங்கள்.
இந்தப் பயிற்சிகள் எல்லாம் உங்கள் கண் தசைகளை வலுப்பெறச் செய்யும். பார்வையை கூர்மை படுத்தும்.
அடுத்த வாரம் ‘பார்க்க’ லாம்!

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

 

“40 வயதைக் கடந்தவர்களைத் தாக்கும் வெள்ளெழுத்து நோய்!” இல் 23 கருத்துகள் உள்ளன

    1. வாருங்கள் தனபாலன்!
      இதற்காகவே நிறையப் படிக்கிறேன். செய்வன திருந்த செய், இல்லையா?
      உங்களின் தொடர் வருகையும் இன்னொரு காரணம் இந்தத் தொடர் நன்றாக அமைய.
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  1. இந்த வெள்ளெழுத்து வந்து விட்டது என்பதே நமக்குத் தெரியவே சில நாட்கள் அல்ல்து மாதங்கள் ஆகிவிடும் ஏனென்றால் நாம் நாற்பதைத் தாண்டுகிறோம் என்பதே புரியாமல் நமது வாழ்க்கை பிசியாக இருக்கும் காலம் அல்லவா? மேலும் கண்ணுக்கு நீங்கள் தந்திருக்கும் பயிர்சிகள் சுலபமாக உள்ளன ஆனால் வண்டிக்கு லைசன்ஸ் வாங்கத்தான் 8 போட சொல்வார்கள் என்று தெரியும் கண்ணால் 8 போடலாம் என்று நீங்கள் எழுதியதைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது பயனுள்ள பகிர்வு நன்றி

    1. வாருங்கள் விஜயா!
      என்னைபோல சின்ன வயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டுவிட்டவர்களுக்கு இன்னும் கஷ்டம். கண் மருத்துவர் பை- போகல் கண்ணாடி கொடுக்கும்போது தான் தெரிய வரும் – ஓ! வெள்ளெழுத்து வந்து விட்டது என்று!
      நீங்கள் 8 போட்டீர்களா?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  2. அருமையான பயனுள்ள பகிர்வு.
    வாழ்த்துக்கள்.
    கண் பயிற்சிகள் மிக நல்லது தொடர்ந்து செய்தால்.
    எங்கள் மனவளகலை எளிய முறை உடற்பயிற்சியில் கண் பயிற்சி இப்படித்தான் சொல்லி தருகிறோம்.

    1. வாருங்கள் கோமதி!
      இந்தப் பயிற்சிகளைப் பற்றி எழுதும்போதே உங்களை நினைத்துக் கொண்டேன். மெழுகுவர்த்தியை வைத்துக் கொண்டு கூட செய்யச் சொல்வார்கள், இல்லையா?
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  3. தெரிந்து கொள்ளவேண்டிய விஶயங்கள். கண்களுக்கென்று இவ்வளவு பயிற்சி முறைகளா?
    எல்லாவற்றையும் தேடிக் கண்டு பிடித்து எழுதுகிறாய். எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
    அருமை. அன்புடன்

  4. உபயோகமான தகவல்கள். நானும் progressive glass தான் உபயோகிக்கிறேன். நேராகத்தான் பார்க்க முடியும். சைடிலுள்ள பொருட்களைப் பார்க்க அந்தப் பக்கம் திரும்பி நேராக அதைப் பார்க்கவேண்டும்!

    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      எந்தக் கண்ணாடி போட்டாலும் அப்படித்தான் பார்க்கவேண்டும்! 🙂 அந்தக் காலத்தில் என் பெரியம்மா, அம்மா எல்லோரும் மூக்கின் மேல் கண்ணடியை தள்ளிக் கொண்டு தலையை குனிந்து கொண்டு பார்ப்பார்கள். அதைப் போல progressive glasses – இல் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.